Saturday, August 18, 2012

ஆசாரக்கோவை

                  


மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:

  • ஆசார வித்து (பஃறொடை வெண்பா)
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து
  • ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் (இன்னிசை வெண்பா)
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்
  • தக்கிணை முதலியவை மேற்கொள்ளல் (இன்னிசை சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்
  • முந்தையோர் கண்ட நெறி (இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை
  • எச்சிலுடன் தீண்டத் தகாதவை (இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்

  • எச்சிலுடன் காணக் கூடாதவை (இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து
  • எச்சில்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு
  • எச்சிலுடன் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்
  • காலையில் கடவுளை வணங்குக (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி
  • நீராட வேண்டிய சமயங்கள் (பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்
  • பழைமையோர் கண்ட முறைமை (இன்னிசை வெண்பா)
உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை
  • செய்யாமல் தவிர்க்க வேண்டியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து
  • செய்யத் தகாதவை (இன்னிசை வெண்பா)
நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை
  • நீராடும் முறை ( இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்
  • உடலைப்போல் போற்றத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்
  • யாவரும் கூறிய நெறி (சவலை வெண்பா)
அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி
  • நல்லறிவாளர் செயல் (இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி வாளர் துணிவு
  • உணவு உண்ணும் முறைமை (இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து
  • கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு
  • உண்ணும் விதம் (இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு
  • ஒழுக்கம் பிழையாதவர் செய்வது (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்
  • பிற திசையும் நல்ல (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு
  • உண்ணக்கூடாத முறைகள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று
  • பெரியோருடன் இருந்து உண்ணும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்
  • கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்
  • உண்ணும் கலங்களைக் கையாளும் முறை (இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்
  • உண்டபின் செய்ய வேண்டியவை (பஃறொடை வெண்பா)
இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி
  • நீர் குடிக்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து
  • மாலையில் செய்யக் கூடியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி
  • உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி
  • இடையில் செல்லாமை முதலியன (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து
  • மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்
  • மலம் சிறுநீர் கழிக்கும் முறை (குறள் வெண்பா)
பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்
  • மலம், சிறுநீர் கழிக்கும் திசை (இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்
  • வாய் அலம்பாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்
  • ஒழுக்க மற்றவை (பஃறொடை வெண்பா)
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்
  • நரகத்துக்குச் செலுத்துவன (நேரிசை வெண்பா)
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்
  • எண்ணக்கூடாதவை (இன்னிசை வெண்பா)
பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும்
  • தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
           தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்
  1. சான்றோர் இயல்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து
  • சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார்
  • மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு
  • உடன் உறைதலுக்கு ஆகாத காலம் (இன்னிசை வெண்பா)
உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்
  • நாழி முதலியவற்றை வைக்கும் முறை (இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்
  • பந்தலில் வைக்கத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்த ரகத்து
  • வீட்டைப் பேணும் முறைமை (பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல்வேண்டு வார்
  • நூல் ஓதுவதற்கு ஆகாத காலம் (இன்னிசை வெண்பா)
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்
  • அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்
  • நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்
  • கேள்வியுடையவர் செயல் (இன்னிசை வெண்பா)
பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்
  • தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று
  • தளராத உள்ளத்தவர் செயல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்
  • ஒழுக்கமுடையவர் செய்யாதவை (இன்னிசை வெண்பா)
தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்
  • விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு
  • அறிஞர் விரும்பாத இடங்கள் (பஃறொடை வெண்பா)
கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை
  • தவிர்வன சில (பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்
  • நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை (இன்னிசை வெண்பா)
பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர்
  • ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை (இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்
  • சில தீய ஒழுக்கங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து
  • சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
ஓராறு செல்லுமிடத்து
  • நூல்முறை உணர்ந்தவர் துணிவு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு
  • சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால் சொல்லிய மூன்று
  • கற்றவர் கண்ட நெறி (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி
  • , வாழக்கடவர் எனப்படுவர் (இன்னிசை வெண்பா)
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்
  • தனித்திருக்கக் கூடாதவர் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்
  • மன்னருடன் பழகும் முறை (இன்னிசை வெண்பா)
கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்
  • குற்றம் ஆவன (இன்னிசை வெண்பா)
தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடுக்குற்ற மாகி விடும்
  • நல்ல நெறி (இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
அளவளா வில்லா இடத்து
  • மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன (இன்னிசை வெண்பா)
முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
காக்கைவெள் என்னும் எனின்
  • மன்னன் முன் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியா ரகத்து
  • மன்னன் முன் சொல்லக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப் பல்காற் பயின்று
  • வணங்கக்கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து
  • மன்னர் முன் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி
  • ஆசிரியரிடம் நடக்கும் முறைமை (இன்னிசை வெண்பா)
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்
  • சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து
  • சொல்லும் முறைமை (இன்னிசை வெண்பா)
விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து
  • நல்ல குலப்பெண்டிர் இயல்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி அல்லால் பிற
  • மன்னர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து
  • பெரியோரிடம் உள்ள முச்செயல்கள் (நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள
  • சான்றோர் பெயர் முதலியவை கூறாமை (நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை
  • ஆன்றோர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிவர் அல்லா தவர்
  • மனைவியின் உள்ளம் மாறுபடுதல் (இன்னிசை வெண்பா)
வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய் விடும்
  • கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை (இன்னிசை வெண்பா)
நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்துமென் பார்
  • பழகியவை என இகழத் தகாதவை (இன்னிசை வெண்பா)
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும்
  • செல்வம் கெடும் வழி (நேரிசை வெண்பா)
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வம் கெடும்
  • பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
உண்டது கேளார் விடல்
  • கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம் கட்டின் மிசை
  • பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும்என் பார்
  • கிடைக்காதவற்றை விரும்பாமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்
  • தலையில் சூடிய மோத்தல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல்
  • பழியாவன (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
மூத்த உளஆக லான்
  • அந்தணரின் சொல்லைக் கேட்க (நேரிசை வெண்பா)
தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப தில்லை
  • சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
நின்று உழியும் செல்லார் விடல்
  • ஐயம் இல்லாத அறிவினர் செய்கை (இன்னிசை வெண்பா)
கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
ஐயமில் காட்சி யவர்
  • பொன்னைப் போல் காக்கத் தக்கவை (இன்னிசை வெண்பா)
தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்
  • எறும்பு முதலியவை போல் செயல் செய்தல் (இன்னிசை வெண்பா)
நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்
  • , சான்றோர் முன் சொல்லும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை
  • புகக் கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்
  • அறிவினர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்
  • ஒழுக்கத்தினின்று விலகியவர் (பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்







Wednesday, August 15, 2012

செம்மொழி தமிழின் தகுதி சான்றுகள்



செம்மொழி தமிழின் தகுதி சான்றுகள்


உலக மொழிகள்:-

                
                உலகத்தில் ஆராயிரதிற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சுமொழிகளே. எழுத்து மொழிகளாக உள்ளனவற்றுள் 
இலக்கிய வளம் நிறைந்தவை மிகச் சிலவே. எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியான தமிழ் ஒன்றே 
என்று வள்ளலாரே அருள்கிறார்!!


செம்மொழிகள்:-

     

               திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். தமிழ்,கிரேக்கம்,இலத்தீன்,சமற்கிருதம்,சீனம்,அரபு,எபிரேயம்,ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் அகத்தியலிங்கம். இவற்றுள் கிரேக்கம்,இலத்தீன்,சமற்கிருதம் ஆகிய மொழிகள் இன்று பேச்சுவழக்கில் இல்லை.



செம்மொழி தமிழின் சிறப்பு:-


            உலகில் இன்று வழங்கும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே எண்ணற்ற இலக்கிய வளங்களைக் கொண்டதாக விளங்கியது தமிழ் மொழி.  தொல்காப்பியம்,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினென்கீழ்கனக்கு,
சிலப்பதிகம்,மணிமேகலை,முத்தொலயிரம் இறையனார்,அகப்பொருள்,
ஆகிய செவ்வியல் இலக்கியங்கள், தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு சான்றாகிறது.


தமிழின் தனிபெரும்தன்மை 



தொன்மை:-


                உலகின் மிகப்பழமையான நிலப்பரப்பு குமரிக்கண்டம். அந்நிலைப்பகுதி கடற்கோளால் 
மூழ்கிவிட்டது. அத்தொன்னிலதில்தான் தமிழ் தோன்றியதெனத் தண்டியலங்கார மேற்கோள் கூறுகிறது.

       ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
       ஏன்கொளிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
       மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
       தன்னே ரிலாத தமிழ்.
       

தமிழின் சிறப்புகள்:-

  • தமிழ் தாய்மொழியாக அல்லாதவர்களும் தமிழை எளிதில் கற்க முடியும். 
  • மனதில் தோன்றும் எண்ணங்களை தெரிவிக்கத்தற்க சொற்களை உடையது தமிழ்.
  • தமிழ் எந்த ஒரு மொழியின் துணையின்றித் தனித்தியங்கும் மொழி.
  •  தமிழ் எழுத்து,சொற்கள் அன்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் கூறுகிறது.இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.....        

               

   தமிழ் ஒரு தனித்தியங்கும் மொழி:-

" தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குச் சொற்களும் நூல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் அழிந்து போயின.....
எஞ்சியுள்ள பழஞ்சொற்களை கொண்டும் தேவைகேற்ப புதுச் சொற்களை புனைந்தும் தமிழால் தனித்தியங்க முடியும்!! " என்று லண்டன் தமிழ் ஆர்வலர் கால்டுவெல் கூறுகிறார்.


நன்றி 
- தமிழ்த்தொண்டு