Sunday, March 25, 2012

வாஞ்சிநாதன்



வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.


வாழ்க்கைச் சுருக்கம்:-


 

 திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.


 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு:-

 

 

அந்நாளில் பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது. வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.
புதுவையில் வாஞ்சி புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்திப்பார். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது. இந்தியர்கள் நடத்திவந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். இதற்காகப் பாடுபட்டு வந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இக்காரணங்களினால் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல வாஞ்சி முடிவு செய்தார்.


ஆஷ் துரை கொலை:-

 

 

1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.



கௌரவிப்பு:-

 

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

 





தேசியம் காத்த செம்மல் - முத்துராமலிங்கத் தேவர்

Muthuramalinga thevar

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை சமயத்துரையினர் 'தேசியம் காத்த செம்மல்' எனப் புகழப்பட்டுள்ளர்கள்.

 

குழந்தை பருவமும் குடும்ப வாழ்க்கையும்:- 

 

தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த பிறந்தவர். உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்ட உக்கிரபாண்டி தேவரின் மீது பார்வதியம்மாள் அவர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தா. இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார். இவரது இளமை பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற இவரது குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். பிள்ளை அவர்கள் தான் தேவரின் பள்ளிபடிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்து கொடுத்தார். பின்னர் இவரது ஆரம்பப்பள்ளி படிப்பை கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் இவர் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்ப பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவரருக்கு சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

 குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்:-

 

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார். ஆப்பநாடின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.

1936 மாவட்ட வாரிய தேர்தல்:-

 

குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.      

1937 மாநில தேர்தல்:-

 

1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது. 1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றிபெற்றார். பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான C.ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.


தொழிலாளர்களின் தோழனாக:-

 

1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போரத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு TVS தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.


திரிபுரி காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்:-

 

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் மீண்டு போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார். பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகபெரிய கூட்டத்தினை கூட்டினார்.

சிறையில்:-

 

வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்க்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் 18 மாத சிறைவாசத்தில் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை கரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.


 சிறை வாசத்திற்கு பின்:-

 

 மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). 1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று தேவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் கூட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்ததாகவும் தகவல்கள் நிலவின ஆனாலும் இதற்க்கு ஆதாரமின்மையால் நிரூபிக்கபடாமல் போயின. பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.                                

1952 பொது தேர்தல்:-

 

1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு:-

 

1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற போர்வர்து ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் நாக்பூரில் நடந்தது. இதில் சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணை தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

 

1957 பொது தேர்தல்:-

 

1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உளைத்துகொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது. தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இம்முறையும் இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.


கொள்கைகள்:-

 

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்
வீரமற்ற விவேகம் கோழைத்தனம் - விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும். ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சி தனது அழிவின் பதில் சென்றது. இந்த கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் இந்த கட்சியிலிருந்த பெரும்பான்மையான மறவர் ஓட்டு வங்கியானது தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் சென்றது. தேவர் இந்த தென்னக தேவரின மக்களின் அன்பிர்க்குரியவராகவும் வணங்குதலுக்குரியவராகவும் திகழ்கிறார். இன்றும் இந்த மக்களின் ஆதரவோடு ஆட்சியமைக்க பல கட்சிகள் இவர்களை ஆதரித்து வருகிறன. இன்றும்கூட சில கலவரங்களின் பொழுது இவரது நினைவு சின்னங்கள் இலக்காவது அனைவரும் அறிந்த ஒன்றே.


 நினைவுச்சின்னம்:- 

 

தமிழ்நாடு அரசு இப்பெருமகனாரைப் போற்றும் வகையில் சென்னை மாநகரில் இவருடைய உருவச் சிலையினை நிறுவியுள்ளது.அச்சிலை நிறுவப்பட்டுள்ள சாலைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.



சிறப்புக் குறிப்புகள்:-

      நடுவண் அரசு 1995இல்  முத்துராமலிங்கத் தேவருடைய அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

    தேவர் தம சொத்துக்களை 17  பாகங்களாய்ப் பிரித்து, அதில் ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு மீதம் 16  பாகங்களை 16  பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தது குறுப்பிடத்தக்கது.





 -நன்றி
  தமிழ்த்தொண்டு













Sunday, March 18, 2012

திருக்குறள்



பொருள்:-  இன்பம் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது, துன்பம் தரும் கடுஞ்சொற்களைப் பேசுவது, இனிமையான கனிகள் இருக்கும்போது கசக்கும் காய்களை விரும்பி
உண்பதை போன்றது. 





பொருள்:- பிறர்க்குத்  துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கும் இன்பம் தரும்.


 நன்றி:- தமிழ்த்தொண்டு 









Sunday, March 11, 2012

திருக்குறள் ஓவியம்

திருக்குறளின் 1330 குறள்களை வைத்து திருவள்ளுவரை ஓவியமாக வரைந்துள்ளார், நாமக்கல் மாவட்டம், எளச்சிப்பாளையம், வித்யாபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11&ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி நவீனா. ‘‘குறள்களைப் படிக்கும்போது எல்லாம் திருவள்ளுவரை குறள்களால் ஓவியமாக வரைந்தால் அருமையாக இருக்குமே என்று நினைப்பேன். அந்த எண்ணத்தின் செயல் வடிவம்தான் இது’’ என்கிறார் நவீனா. இந்த ஓவியம் வரைவதற்காக மூன்று வாரங்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து இருக்கிறார். 
 

மணிகாமி - Moneygami

                                       உங்களுக்கு ஒரிகாமி தெரிந்து இருக்கும், ‘மணிகாமி’ தெரியுமா? ஜப்பானின் ஆர்ட்டிஸ்ட், யுசுக்கி ஹசெகவா (Yosuke Hasegawa) மணிகாமியில் கலக்குகிறார். ஒரிகாமி போலவே ரூபாய் நோட்டுகளில் செய்வது மணிகாமி. உலக நாடுகளில் உள்ள ரூபாய் நோட்டுகளில் அந்த அந்த நாடுகளில் பிரசித்திபெற்ற தலைவர்களின் படங்கள் அச்சடிக்கப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டில் அந்தத் தலைவர்களின் உருவம் இருக்கும் பகுதிக்கு ஏற்ற வகையில் மடித்து, அவர்களின் தலையில் தொப்பி இருப்பதைப் போல் செய்து அசத்துகிறார் யுசுக்கி. நம்ம தேசப்பிதா மகாத்மா காந்திக்கும் அழகான தொப்பியை அணிவித்து இருக்கிறார்.
MONEYGAMI

                                                                                                           - தமிழ்த்தொண்டு  

தமிழ்த் தாய் வாழ்த்தின் பொருள்



"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"


இப் பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடானது , பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!


இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமே யாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
 சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"


இப்பாடலின் தற்போதுள்ள இசைவடிவத்தைக்கொடுத்தது, மெல்லிசை மன்னர்.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.


--நன்றி
தமிழ்த்தொண்டு