வாழ்க்கைச் சுருக்கம்:-
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில்,
1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே
அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில்
பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம்
சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு
முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு:-
அந்நாளில் பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது. வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.
புதுவையில் வாஞ்சி புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்திப்பார். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது. இந்தியர்கள் நடத்திவந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். இதற்காகப் பாடுபட்டு வந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இக்காரணங்களினால் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல வாஞ்சி முடிவு செய்தார்.
ஆஷ் துரை கொலை:-
1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.
கௌரவிப்பு:-
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
இது போன்ற எண்ணற்றோரின் ரத்தத்தில் விளைந்த சுதந்திரத்தைத் தான் நாம் அனுபவித்து வருகிறோம்...
ReplyDelete